அஷ்ரஃபின் சத்திய வாக்கை மீறி ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த முஸ்லிம் தலைமைகள் இன்று சீரழியும் நிலைக்குச் சென்றுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

அஷ்ரஃபின் சத்திய வாக்கை மீறி ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த முஸ்லிம் தலைமைகள் இன்று சீரழியும் நிலைக்குச் சென்றுள்ளனர்

மரம் நடும்போது நன்மை தரும் மரங்களையே நடவேண்டுமேயன்றி நஞ்சு தரும் மரங்களை நடக்கூடாதெனவும் எம்.பிக்களைப் பெறுவதற்காக தவறான தலைமைகளுடன் கூட்டணியமைக்க முடியாதென்றும் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

இறக்காமத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் இறக்காம பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே.எல். சமீம் உட்பட பலர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டது பற்றி நடாத்தப்பட்ட இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய தேசிய காங்கிரஸ் தலைவர் கூறியதாவது,

சந்தர்ப்பவாதக் கூட்டுக்கள், கொள்கைகள் ஒரு போதும் சமூகத்துக்கு விமோசனம் தராது. எம்.பிக்களை அதிகரிக்கவும் சிலர் எம்.பியாவதற்குமே சிலருக்கு முஸ்லிம் கூட்டமைப்புத் தேவைப்படுகிறது. சாதிக்க வேண்டுமானால் எம்.பிதான் தேவையென்பதில்லை. பாராளுமன்றத் தேனீர்ச்சாலைகளில் சாப்பிடுவதற்கும், தேனீர் குடிப்பதற்குமான எம்பிக்களைத் தெரிவு செய்யத் தேவையில்லை. 

நாட்டுக்குப் பொதுவான அரசியல் யாப்பை உருவாக்க வேண்டியுள்ளதால் இதுபற்றிச் சிந்திக்கும் தூரநோக்குள்ள எம்பிக்களே எமக்குத் தேவைப்படுகிறது. 

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றிருந்தால் எமது கிழக்கின் வளங்கள் உட்பட நாட்டின் வளங்களை வௌிநாடுகள் சூறையாடியிருக்கும். இதைத்தடுப்பதற்கே தேசிய காங்கிரஸ் வியூகம் வகித்தது. இதனால் பழுத்த அனுபவமுள்ள பிரதமரதும் துணிச்சலுள்ள ஜனாதிபதியையும் தெரிவு செய்ய முடிந்துள்ளது.

தீர்க்கதரிசனம் விசுவாசம் நாட்டுப்பற்று, சமூகப்பற்று இருந்தால் எதையும் சாதிக்கலாம். பெருந்தலைவர் அஷ்ரஃப் இவற்றை வைத்துத்தான் அதிகம் சாதித்தார். நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பவர்களாக இருந்தால் கூட்டுச் சேர்வது மட்டுமல்ல எமது வெற்றிகளை விட்டுக் கொடுக்கவும் தயாராகவுள்ளோம். 

அதாஉல்லாவுக்கு பாராளுமன்றம் புதிதல்ல. அமைச்சுப்பதவிகள் தேவைப்பட்டதுமல்ல. சமூகத் தலைவர்களாக நடிக்கும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்களையும் தலைமைகளையும் தோற்கடிப்பதே அதாஉல்லாவுக்கு தேவையாகவுள்ளது.

பெருந்தலைவர் அஷ்ரஃபின் சத்திய வாக்கை மீறி ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த சில முஸ்லிம் தலைமைகள் இன்று சீரழியும் நிலைக்குச் சென்றுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியே அழிந்து உருக்குலையும் நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.

சத்தியம் வெல்லுமென்பதற்கு இதுதான் உதாரணம். தேசிய காங்கிரஸின் சத்தியம் வெல்லும் வரை பொறுமையாக இருந்தோம். இன்று கிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலிருந்தும் மக்கள் சாரி, சாரியாக தேசிய காங்கிரஸை நாடி வருகின்றனர். இதை எமது சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

இறக்காமம் பிரதேசத்திற்கு அதிகம் செய்ய வேண்டியுள்ளது. இப்பிரதேசத்து தாய்மார்கள் சுகப்பிரசவத்துடன் குழந்தை பெற்றெடுக்க தரமான வைத்தியசாலை வேண்டும். சுற்றுலா நீதிமன்றம், தனியான கல்வி வலயம் என்பவற்றை அமைப்பதற்கான திட்டங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ராஜகிரிய குறூப் நிருபர்

No comments:

Post a Comment