கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த மக்கா பெரிய பள்ளிவாசலின் புனித கஃபாவை சூழவுள்ள பகுதி கடந்த சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
புனித கஃபாவை ஏழு தடவைகள் சுற்றிவரும் ஆண்டு முழுவதும் மேற்கொள்ள முடியுமான உம்ரா வழிபாட்டை சவூதி நிர்வாகம் கடந்த வாரம் இடைநிறுத்தியதோடு கஃபாவை சுற்றியுள்ள பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் உம்ரா அல்லாத வழிபாட்டுக்காக கஃபாவை வலம் வரும் பகுதியை திறப்பதற்கு மன்னர் சல்மான் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக சவூதி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கஃபாவை வலம் வருவதை காணமுடிந்தபோதும் உம்ரா வழிபாட்டை பூர்த்தி செய்வதற்கான கஃபாவை நெருங்கிய பகுதி மூடப்பட்டுள்ளது.
கஃபாவை அணுகுவதைத் தடுக்க அங்கு தடுப்புகள் போடப்பட்டிருப்பதோடு பச்சை நிற சீருடை அணிந்தவர்கள் அங்கு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நோய்க்கிரிமிகளில் இருந்து பாதுகாக்கும் சுத்தம் செய்யும் நடவடிக்கைளுக்காக சவூதி நிர்வாகம் கடந்த வியாழக்கிழமை பெரிய பள்ளிவாசலை முழுமையாக மூடியது.
உம்ராவுக்கான முன்னெப்போதும் இல்லாத இந்தத் தடையானது வரும் ஜூலை முடிவில் இடம்பெறவிருக்கும் ஹஜ் கடமையிலும் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
உம்ரா வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டபோதும் இரவு நேர சுத்தம் செய்தல் மற்றும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் தவிர்த்து மக்கா பெரிய பள்ளிவாசல் மற்றும் மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
சவூதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment