முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைக்க முயற்சி - ஹக்கீம், ரிஷாட் தரப்பு ஆராய்வு - அதாவுல்லா நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைக்க முயற்சி - ஹக்கீம், ரிஷாட் தரப்பு ஆராய்வு - அதாவுல்லா நிராகரிப்பு

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என முஸ்லிம் கட்சிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை என அறியவருகிறது. அதேவேளை முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் நேற்று மாலை வரை எந்த முடிவையும் எட்டியிருக்கவில்லை. 

இதேவேளை தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் இன்று மாலை தீர்மானமொன்று எட்டப்படலாம் என இரு கட்சிகளினதும் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து இணைந்த கூட்டணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற அவசியத்தை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி வலியுறுத்தி வருகின்ற நிலையில் அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் அவ்வாறு கூட்டணி அமைக்கப்பட்டால் அக்கூட்டணியில் தாம் இணைந்துகொள்ளப் போவதில்லையென்றும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நாடு திரும்பியதுமே அவரது முடிவை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இதுவரை எந்த முஸ்லிம் கட்சிகளும் தாம் தனித்து அல்லது கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் தீர்க்கமான முடிவெதையும் நேற்று வரை அறிவித்திருக்கவில்லை.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்களோடு பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது, இன்று பிற்பகலுக்குப் பின்னர் முடிவு எட்டப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டனர்.

இதே வேறு தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதை தான் வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ராஜகிரிய நிருபர்

No comments:

Post a Comment