(இராஜதுரை ஹஷான்)
உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ள நிலையிலும் அதன் பயனை அரசாங்கம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன, முறையற்ற நிதி முகாமைத்துவத்தினால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை 25 தொடக்கம் 35 சதவீதத்திற்குமிடையில் குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை அரசாங்கம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. விலை குறைப்பு செய்வதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் அவசியமில்லை.
உலக சந்தையில் எரிபொருளின் விலை எந்நேரத்தில் அதிகரிக்கும், குறைவடையும் என்பதை யூகிக்க முடியாது. அதிகரிக்கும் போதும், குறைவடையும் போதும் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளகாத்திருந்தால் எவ்வித பயனையும் பெற்றுக் கொள்ள முடியாது.
கடந்த அரசாங்கம் எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் எரிபொருள் விலைசூத்திரத்தை அறிமுகம் செய்தது. அதற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டன.
அமைச்சரவையின் அங்கிகாரத்தினை கோரவில்லை. தற்போது அரசாங்கம் அமைச்சரவையின் அங்கிகாரத்தை கோருவதாக குறிப்பிடுவது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். எரிபொருளின் விலையை அரசாங்கம் நிச்சயம் குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment