சவுதி அரேபியா விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் கச்சா எண்ணெய் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவே இதனைச் சரி செய்யும் விதமாக, சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் உற்பத்தியைக் குறைப்பதில் சுமுகமான முடிவு எட்டப்படாத சூழலில், நேற்று காலை கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாகச் சவுதி அறிவித்துள்ளது.
சவுதிக்கு அடுத்து அதிகப்படியாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ரஷ்யா, ஒபெக் முடிவுக்கு ஒப்புக்கொள்ளாத சூழலில், ரஷ்யாவுக்குப் பதிலடி தரும் வகையில் சவுதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவுதியின் இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 30% வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 31 டொலர் ஆகக் குறைந்துள்ளது.
1991 க்கு பிறகு கடந்த 29 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு சரிவைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment