ஒன்பது பரீட்சைகளை ஒத்தி வைத்தார் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

ஒன்பது பரீட்சைகளை ஒத்தி வைத்தார் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

மார்ச் மாதம் நடத்தப்படவிருந்த ஒன்பது பரீட்சைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

மேலும் மறு அறிவித்தல் வரை பரீட்சைகள் திணைக்களத்துக்குள் பொதுமக்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் இணையத்துக்கூடாக மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் திகதி மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

இது பற்றிய மேலதிக தகவல்களை 1911 என்ற இலக்கத்துக்கூடாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

இதேவேளை மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடத்தப்படவிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 02 க்கான பரீட்சை, ஞாயிறு பாடசாலைகளுக்குான இறுதிச் சான்றிதழைப் பெறுவதற்கான பரீட்சை, மார்ச் 25 முதல் 29 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த தேசிய கலை செயன்முறைப் பரீட்சைகள், மார்ச் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை மத்திய வங்கிக்கு முகாமைத்துவ பயிற்சியாளர்களை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை, 29 அம் திகதி நடைபெறவிருந்த அரச கரும மொழிகள் திறமைக்கான எழுத்துப் பரீ்ட்சைகள் உள்ளிட்ட ஒன்பது பரீட்சைகளே மறுஅறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment

Post Bottom Ad