ரணிலும், சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட. அவ்வாறு நடைபெறாமல் தனித்தனியாக போட்டியிட்டால் சஜித் அணியையே நாம் ஆதரிப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி இன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை அட்டனில் கொண்டாடியது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மத்தியஸ்தத்துடன் ரணில் தரப்பும், சஜித் அணியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது சந்தோசமான தகவலாகும். இருவரும் பிளவுபடாமல் ஐக்கியமாக பயணித்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமையும்.
சிலவேளை இணைவு சாத்தியமில்லாமல், பொதுத் தேர்தலில் இரு அணிகள் போட்டியிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய நாம் சஜித் பக்கமே நிற்போம். அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே, இனி முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். எமது மக்களும் சஜித் தலைமையிலான அணிக்கு பேராதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட்டால் அது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அதேவேளை, சட்டம் அனைவருக்கும் சமமாகும். எனவே, பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க குற்றம் இழைத்திருந்தால் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றம் இழைக்கவில்லையெனில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தான் நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்துக்கே கூடுதல் வேலைகளை செய்தார். அவர் நாட்டுக்காக பெரிதாக எதனையும் செய்யவில்லை. எனவே, தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி, பொலன்னறுவை மாவட்டத்துக்குள்ளேயே அவர் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். " - என்றார்.
No comments:
Post a Comment