வடகிழக்கில் இம்முறை பொதுத் தேர்தலில் சில்லறைத்தனமான முறையில் பல கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து சின்னாபின்னமாக்கி தமிழர்களின் ஜனநாயக பலத்தினை சிதறடிக்கும் சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தற்போது புதிதாக ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற அரசாங்கத்தின் போக்குகளை நாங்கள் பார்க்கின்ற போது இந்த நாட்டில் சிறுபான்மை இனம் இருக்கின்றது என்பதனை மறந்து செயற்படுகின்ற தன்மையினை நாங்கள் அவதானித்துக் கொண்டு இருக்கின்றோம். தமிழ் இனத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரையும் மண்ணுக்குள்தான் தேடி பார்க்க வேண்டும். என பரிகாசம் செய்யுமளவிற்கு எமது நிலைப்பாடானது தற்போது தள்ளப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் அபிவிருத்தி விளையாட்டுக் கழகத்தினால் 38 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு (08.03.2020) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில், குறிப்பாக இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவராக தன்னை சித்தரித்து வருகின்றார். அதற்கமையவே தான் செயற்பட போவதாகவும் கூறி வருகின்றார்.
தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் தனது கட்சியானது வடகிழக்கு மாகாணங்களில் போட்டியிடாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றார். இதனை பார்க்கின்ற பொழுது வட கிழக்கு மக்களின் வாங்குகள் தனக்கு தேவையில்லைபோன்று அவர்களின் நிலைப்பாடு இருப்பதனை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இம்முறை பொதுத் தேர்தலில் சில்லறைத்தனமான முறையில் பல கட்சிகளை உருவாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து சின்னாபின்னமாக்கி தமிழர்களின் ஜனநாயக பலத்தினை சிதறடிக்கும் சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த அரசாங்கத்தின் நிலைப்போக்கினை ஒரு வகையில் திசைப்படுத்த வேண்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முப்பது ஒன்று நாற்பது ஒன்று பிரேரணைகளை ஏற்றுக் கொண்டால் இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக பொறுப்புக் கூற வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், மனித உரிமையை நிலை நாட்டல் போன்ற பல விடயங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கம் இந்த விடயங்களில் இருந்து வெளியேறியுள்ளது என்றால் குறித்த விடயங்களில் இந்த அரசாங்கம் கரிசினை செலுத்தப் போவதில்லை என்பது புலனாகியுள்ளது.
எனவே தமிழ் மக்கள் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து தமிழ் தேசிய கட்சியின்பால் சிந்தித்து சரியான முடிவினை நீங்கள் எடுக்க வேண்டும்.
முக்கியமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான விடயங்களை கையாள்வதற்கு செயலகம் அமைக்கப்பட்டது. இழப்பீட்டுக்கான அலுவலகம் அமைக்கப்ட்டது. அதேபோன்று அபிவிருத்தி திட்டங்களாக வீதி அபிவிருத்தி திட்டம், கம்பரெலிய திட்டம், வீடமைப்புத் திட்டம், குடிநீர் திட்டம் போன்ற பல திட்டங்கள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கத்தில் அவையனைத்தும் பேச்சளவில் உள்ளது. ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு என்பனவற்றினை குறிப்பிடலாம்.
எனவே எமது மக்கள் ஏமாற்றுப்படக் கூடாது இந்த அரசாங்கம் எமது மக்களை ஏமாற்றம் செய்கின்ற கைங்கரியத்தை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் இந்த விடயங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
தென் பகுதியில் பெரும்பானமை மக்கள் ஒன்றுபட்டுள்ளனர், முஸ்லிம் மக்களும் ஒன்று பட்டுள்ளனர் அதே போன்று தமிழ் மக்களும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்.
சர்வதேச ரீதியாக மனித உரிமை அணையாளர் அவர்கள் தெளிவாக கூறியிருக்கின்றார். தமிழ் மக்கள் விடயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பு கூறல், நல்லிணக்கம், மனித உரிமை போன்ற விடயங்களில் தவறிழைத்துள்ளது என்று கூறியிருக்கின்றார்.
இதனூடாக இந்த அரசாங்கம் தவறிழைத்துள்ளது என்பதனை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துள்ளது. இதற்கமைய நாங்கள் செயற்பட வேண்டும். இந்த தேர்தலில் இந்த அரசாங்கம் சார்பான பல கட்சிகளுக்கு நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதனை நான் இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு நிருபர்
No comments:
Post a Comment