மூவின மக்களும் நிம்மதியாக வாழ புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் - எங்கிருந்தோ வந்து எமது மக்களுக்கு தலைமை கொடுத்து ஏமாற்றிச் செல்கின்றனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

மூவின மக்களும் நிம்மதியாக வாழ புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் - எங்கிருந்தோ வந்து எமது மக்களுக்கு தலைமை கொடுத்து ஏமாற்றிச் செல்கின்றனர்

மூவின மக்களும் அவரவருக்குரிய உரிமையோடும், சுதந்திரத்தோடும் நிம்மதியாக வாழக்கூடிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். 

பொத்துவில் உலமா சபையினருக்கும், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (9) பொத்துவில் ஜூம்ஆ பள்ளிவாசலில் மௌலவி ஏ.ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடிவு செய்து, அவரை அக்கரைப்பற்றுக்கு அழைத்து வந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். 

வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இந்த நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கைகளாகும். 

எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் இரண்டு கோரிக்கைகளை அவர் நிறைவேற்றினார். அவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஞாபகமூட்டி, மூவின மக்களும் அவரவருக்குரிய உரிமையோடும், சுதந்திரத்தோடும் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைத்து, எமது மூன்றாவது கோரிக்கையினையும் அவரிடம் முன்வைத்துள்ளோம். அதனை அவரினால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். 

அஷ்ரபின் பாசறையில் வளர்க்கப்பட்ட நாங்கள் அவரது மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். இப்போது எங்கிருந்தோ வந்து எமது மக்களுக்கு தலைமை கொடுத்து எம்மவர்களை ஏமாற்றிச் செல்கின்றனர். தொடர்ந்தும் எமது மக்களை ஏமாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது.

இப்போது ஒவ்வொரு பிரதேசத்திலும் பொருத்தமான தலைமைகளை இனம்கண்டு வருகிறோம். பொத்துவிலிலும் பொருத்தமான தலைமையை இனம்கண்டு, அவர்களினூடாக எமது மக்களை முறையாக வழிநடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார். 

இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் எம்.எஸ்.அன்சார், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.ஜமாஹிம் மற்றும் அன்வர் சதாத், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.முபாரக், உலமாக்கள், அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஏ.எம்.சித்திக் மற்றும் அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

(பாலமுனை விசேட நிருபர்)

No comments:

Post a Comment