உயிர் ஆபத்துக்களையும், படுகொலைகளையும், உறவினர்கள் கடத்தல்களையும், குற்றப் புலனாய்வு விசாரணைகளையும் தொடர்ச்சியாக சந்தித்து, சோதனை வேதனைகளுக்கு முகம்கொடுத்த கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் தொடர்பாக அம்பிளாந்துறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால வரலாற்றையும் நாம் பட்ட துன்பங்களையும் ஒருகணம் அறிந்திருப்பது நல்லது. பாராளுமன்ற காலத்திற்குள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.
அந்த வரிசையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அ.சந்திரநேரு வெலிகந்தையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் பயணம் செய்த விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பண்டாரியாவெளியை சேர்ந்த கௌசல்யன் உட்பட ஆறு பேரும் இதில் கொலை செய்யப்பட்டனர்.
படுகொலை நடந்து பத்து மாதங்கள் கடந்த நிலையில் நத்தார் நள்ளிரவு ஆராதனை வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் துணைவியார் சுகுணம் அக்கா படுகாயம் அடைந்தார்.
அந்த கொலை நடந்து சரியாக ஒரு வருடம் கடந்த நிலையில் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் உறவினர்கள் என பலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு.
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் இவ்வாறான பேராபத்தால் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் கொழும்பில் மாதுவெல பாராளுமன்ற விடுதிகளில் முடங்கி கிடந்த வரலாறு அப்போது எமக்கு ஏற்பட்டது.
அந்த சூழ்நிலையில்தான் கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் போட்டியிடக் கூடிய வகையில் பாதுகாப்பு இருக்கவில்லை அதில் வேட்பாளர்களாக போட்டியிட அச்சத்தால் எவரும் வரவில்லை.
இதனால் 2008 இல் கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் போட்டியிடவில்லை. 2015, பொதுத் தேர்தலின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட அனேகமானவர்கள் ஆர்வம் காட்டினர்.
இப்போது எந்த அச்ச சூழலும் இல்லாத காரணத்தால் இன்னும் பலர் எமது கட்சியில் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட இணைகின்றனர் என்றார்.
(மண்டூர் நிருபர்)
No comments:
Post a Comment