ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். பதூர்தீன் திடீர் இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 18, 2020

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். பதூர்தீன் திடீர் இராஜினாமா

எம்.ஐ.லெப்பைத்தம்பி 

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். பதூர்தீன் தனது உறுப்பினர் பதவியை இன்று 18.03.2020 ஆம் திகதி வியாழக்கிழமையிலிருந்து திடீர் இராஜினாமாச் செய்வதாக thehotline இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் எமக்குத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டகச் சின்ன சுயேட்சைக் குழுவில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மீராவோடை மேற்கு வட்டார மக்களின் பெரு ஆதரவுடன் வெற்றி பெற்று தெரிவான நான், கடந்த இரண்டாண்டு காலமாக என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு எதுவித பிரதியுபகாரமும் எதிர்பாராமல் தன்னால் முடிந்த சேவைகளை எனது சக்திக்குட்பட்டு செய்துள்ளேன். 

கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் தான் அங்கம் வகித்த கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடந்துள்ளதுடன், சபையில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டத்திற்கு ஒத்துழைப்பாய் இருந்து வந்துள்ளேன். 

அதேநேரம், நான் கட்சி மாறப் போவதாகவும் எதிரணியை ஆதரிக்கப் போவதாகவும் வெளிவந்த வதந்திகள் தொடர்பில் எந்தவித உண்மையும் இல்லையென்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எனது சுயவிருப்பின் பேரில், எந்தவித அரசியல் அழுத்தங்களுமின்றி, சொந்த நலனை அடிப்படையாகக் கொண்டு, தான் இதுவரை வகித்து வந்த பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்கின்றேன். 

குறித்த இராஜினாமா சுயவிருப்பின் அடிப்படையில் என்பதுடன், எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதுடன், இனிமேலும் இப்பதவியில் தொடரவோ, கட்சி ரீதியான எந்த வித பதவிகளையோ பொறுப்புக்களையோ வகிக்கவோ போவதில்லை. 

இப்பதவியூடாக எந்தவித பெயரையோ புகழையோ பொருளாதாரத்தையோ சம்பாதிக்கப் போவதில்லை என்பதுடன், இதனூடாக எதிர்காலத்தில் எதனையும் அடையும் எண்ணமோ நோக்கமோ இலலை. 

அல்லாஹ்வின் உதவியுடன் சொந்தக்காலில் நின்று வியாபார முயற்சிகளை மேற்கொண்டு, அதனூடாக கிடைக்கப் பெறும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியூடாக வறிய மக்கள் மற்றும் தேவையுடையோருக்கான மக்கள் நலப்பணிகளை அரசியல் கலப்பில்லாமல் மரணம் வரை முன்னெடுக்கவுள்ளேன். 

மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள அரசியல் என்ற அடையாளம் எனக்கு அவசியமில்லை. அரசியலையும் தாண்டி மக்களுக்கான எனது பணி தொடரும். 

அத்தோடு, எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சிகளுடனோ அரசியல் சார்ந்த தனி நபர்களுடனோ சேர்ந்து இயங்கவோ அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எண்ணமோ இல்லையென்பதுடன், இது விடயத்தில் எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்பதை அறுதியாகவும் இறுதியாகவும் கூறிக் கொள்கின்றேன். 

இனி வருங்காலங்களில் ஒரு மக்கள் பிரதிநிதியாக, பிரதேச சபை உறுப்பினராக அல்லாமல் சாதாரணதொரு அடிமட்ட வாக்காளனாக எனது வாக்குரிமையை நான் விரும்பும் ஒருவருக்கு அளிப்பேன். 

அத்தோடு, என்னை நம்பி எனக்கு கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தேசியத் தலைமை கெளரவ றவூப் ஹக்கீம் அவர்களுக்கும், அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் மற்றும் வாக்களித்த மக்கள் ஆகியோருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

மேலும், என்னோடு சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தேர்தலில் போட்டியிட்ட சக வேட்பாளர்களுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள், போராளிகள், எனது வெற்றிக்காக அயராது உழைத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment