இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது பிரதான வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
கொட்டகலையில் அமைந்துள்ள சி.எல்.எப். தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டத்தில் நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமியும், பதுளை மாவட்டத்தில் ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானும் களமிறங்கவுள்ளனர்.
இதற்கான அனுமதி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடத்தில் கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது.
கேகாலை மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனையும் இரத்தினபுரி மாவட்டத்தில் ரூபன் பெருமாளையும் களமிறக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆலோசித்துள்ளது.
அதேபோன்று கொழும்பிலும் ஒரு பிரதான வேட்பாளரை போட்டியிட வைப்பது குறித்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் தாமரை மொட்டு சின்னத்திலும், கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சின்னத்திலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட ஆலோசித்துள்ளது.
இதனை தவிர தேசிய பட்டியலில் இரண்டு பேருக்கு பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இதேவேளை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மாகாண சபையில் முக்கிய பதவிகள் வழங்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment