கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் ஈரான் பிரஜை ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உமா ஓயா திட்டத்தில் பணிபுரிவதற்காக நேற்று முந்தினம் (05) ஈரானிலிருந்து வருகை தந்த 36 வயதான ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் சசோதரரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவர் ஈரானில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, பல நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று காரணமாக, வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் 3,200 பேர் தொடர்பில் தரவுகள் திரட்டப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 1,679 பேர் இலங்கை பிரஜைகள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 80 பேரின் மாதிரிகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் ஆய்விற்குட்படுத்தப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறினார்.
அவர்களில் சீன பெண்ணுக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வௌிநாடுகளில் இருந்து வருவோரை இரண்டு வாரங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 70 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment