வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீசா வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (11) மாலை இது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனிமைப்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்துக்கு வெளிநாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு மாதத்துக்கு விசா வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (13) முதல் இந்த புதிய நடவடிக்கை அமுலுக்கு வர உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர யாரும் வீசா பெற முடியாது. ஆனால் அத்தியாவசிய மற்றும் அரசுப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தூதர்கள், சர்வதேச அமைப்புகளில் பணிபுரிபவர்கள், வேலை வாய்ப்பு திட்டங்களில் தொடர்புடையவர்களுக்கு வீசா அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்சு, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளில் இருந்து பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு பிறகு வந்தவர்கள் அல்லது அந்த நாடுகளின் வழியாக வந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்கத்து நாட்டு எல்லைகளை முழுமையாக மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியர்கள் அடுத்த இரு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1400 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வீசா இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கும் ஏப்ரல் 15ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடக்கும் விழாக்களையும் இரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
(மாலை மலர்)
No comments:
Post a Comment