மூன்று நாட்களாக தொடர்ந்து தேடப்படும் ரவி கருணாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

மூன்று நாட்களாக தொடர்ந்து தேடப்படும் ரவி கருணாநாயக்க

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இதுவரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் முடியாது போயுள்ளது.

குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (09) காலையும் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் அமைந்துள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்று வெறுமையாக திரும்பியுள்ளனர்.

கடந்த இரு தினங்களிலும் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவர் அங்கு இருக்கவில்லை.

குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 06 திகதி பிடியாணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணை ஒன்றை பெற்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய கடந்த நான்காம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் குறித்த விடயங்களை முன்வைத்தனர்.

அதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க சந்தேகநபர்களை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.

இதேவேளை குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று அர்ஜூன் அலோசியஸின் வீட்டிற்கு சென்றிருந்த போதிலும் அவரும் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment