கூட்டமைப்பு தோல்வி அடையுமாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை புரிந்துகொள்ள வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

கூட்டமைப்பு தோல்வி அடையுமாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தோல்வி அடையுமாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்துகொள்ள வேண்டுமென முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக நாடாளுமன்ற தேர்தலை இம்முறை நான் சந்திக்கின்றேன். இதுவரை காலமும் ஏனைய வேட்பாளர்களுக்காக உங்களுடைய பிரதேசங்களிலே வாக்குகளை சேகரிக்க வந்த நான் இன்று முதல் தடவையாக எமது தேர்தலுக்காக உங்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக நான் முதல் தடவையாக உங்கள் முன் நிற்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் கூட்டமைப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பல விமர்சனங்கள் இருக்கின்றது. அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இருக்கின்ற விமர்சனங்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கருத்துக்கள்தான் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிழக்க செய்வதாக அமைந்திருக்கின்றது.

வெறுமனமே இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கான வாய்ப்பினையும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான சந்தர்ப்பத்தையும் நீங்கள் வழங்காவிட்டால் இனிவரும் காலங்களிலே இளைஞர்கள் ஒரு தேர்தலை அல்லது ஒரு அரசியலை சந்திக்க பயப்படுவார்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பினை அளிக்கின்ற சந்தர்ப்பத்திலே உங்களுடைய வாக்குகளுக்கு நம்பிக்கை இல்லாதவனாக நான் மாறுகின்ற சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால், அந்த கதிரையினை அலங்கரிக்க மாட்டேன் என உங்களுக்கு நான் சத்தியம் செய்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். உங்களை வைத்து அரசியல் செய்த காலங்கள் போய் இளைஞர்கள் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கின்றோம்.

கடந்த காலங்களிலே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சிலருடைய கருத்துக்கள் சிலருடைய பேச்சுக்கள் காரணமாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமிழந்து சென்று கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வளவு காலமும் பலமிழந்து செல்வதற்கான காரணங்களை கடந்த காலங்களிலே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே பதில் சொல்ல வேண்டும். இருபத்திரெண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாங்கள் இன்று பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாறியிருக்கிறோம்.

நீங்கள் எங்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு. நிச்சயமாக உங்களுக்கான சரியான அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

மேலும் எங்களுடைய வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேட்சை கட்சிகள் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கங்கள் சிங்கள தேசிய கட்சிகள் ஊடாக எங்களுடைய வன்னி மாவட்டத்திலே பல நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பதாகும்.

அதேநேரம் ஒவ்வொரு கட்சிகளும் அரசியல் நோக்கத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையிலே எங்களுடைய வாழ்வாதார பிரச்சினை, அரசியல் பிரச்சினை தொடக்கம் எங்களுடைய அடிப்படை பிரச்சினை வரை பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் தோல்வி அடையுமாக இருந்தால் அது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான இழப்பல்ல. ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

வவுனியா விஷேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad