பட்டதாரி பயிலுனர்களை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்கும் வகையில் அவர்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதேச செயலகங்களில், சேவையில் இணைந்துள்ள, பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி நடவடிக்கைகள், தற்போதைய நிலை கருதி எதிர்வரும் மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்களின் உதவியை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வழங்கும் வகையில், அவ்வலுவலகங்களில் அவர்களை தற்காலிகமாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயினும், ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதன் காரணமாக, அவர்களால் பணிக்கு திரும்ப முடியாத நிலை கருதி, நாளைய தினம் (30) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்திற்கு சேவைக்கு சமூகமளித்தல் அத்தியாவசியமல்ல எனவும், இது தொடர்பிலான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment