(ஆர்.யசி)
எதிர்வரும் இரு நாட்களுக்குள் "கொவிட் -19" எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான மருந்துகள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
அத்துடன் பொதுமக்களின் வீடுகளுக்கே மருந்துப் பொருட்கள் சென்றடையும் வகையிலான அரச மருந்தகங்களின் சேவையினை மேலும் ஆறு மாத காலத்திற்கு முன்னெடுக்கும் வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகின்றது.
அரச மருந்தகங்கள் தவிர்ந்து ஏனைய அனைத்து மருந்தகங்களையும் உடனடியாக பூட்ட வேண்டும் என அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அரச மருந்தகங்கள் பல மூடப்பட்ட நிலையில் இருந்தது.
தமக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது குறித்து அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் இதனை கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் எண்ணூறு அரச மருந்தகங்கள் உள்ளன. இவை அனைத்துமே மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள மருந்தகங்கள் என்ன என்பதை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் சிரமங்கள் இல்லாது குறித்த மருந்தகங்களில் தமக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல் எவ்வாறு இங்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதென்றால், ஒவ்வொரு மருந்தகங்களிலும் அவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் ஒட்டப்பட்டுள்ளது. "வட்சப், வைபர்" இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இலக்கங்களுக்கு மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளின் பெயர்களை வைத்தியரின் மருந்துச்சீட்டு துண்டை அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் மக்களுக்கு தேவையான மருந்துகளை உரிய வீடுகளுக்கு அனுப்ப சில முறைகளும் கையாளப்படுகின்றது. தபால் நிலையங்களுக்கு வழங்கி அவற்றை தபால்காரர்கள் மூலமாக உரிய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும், அதேபோல் சில மருந்தகங்களில் மருந்துகளை கொண்டுசென்று வழங்கும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களை கொண்டும் வழங்கப்படும். தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ள சிரமப்படும் நபர்கள் தமது கிராம சேவகரிடம் இதனை அறிவிக்க முடியும்.
இவ்வாறான மருத்துவ சேவை வெறுமனே ஒரு கிழமைக்கு மாத்திரம் முன்னெடுக்க நாம் திட்டமிடவில்லை. குறைந்தது ஆறு மாத காலம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் தயார்நிலையில் உள்ளோம்.
கேள்வி:- கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான மருந்துகளை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்படுகின்ற நிலையில் இலங்கைக்கு இந்த மருந்துகளை கொண்டுவரும் திட்டம் எவ்வாறு கையாளப்படுகின்றது?
ஆம், இது சீன மருத்துவ வேலைத்திட்டம், ஜப்பான் மற்றும் ஏனைய சில நாடுகளுக்கு இந்த மருந்துகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். எமது அரசாங்கமும் சுகாதார அமைச்சும் குறித்த மருத்துவ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்த உடன்படிக்கையில் கடந்த வாரம் கையொப்பமிட்டு எமது நாட்டுக்கு குறித்த மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
சீன அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அனேகமாக இன்னும் இரண்டு தினங்களில் இலங்கைக்கு தேவையான மருந்துகள் கொண்டுவரப்படும் என சீன மருத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது. எமது சுகாதார அமைச்சும் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
அதேபோல் ஜப்பான் நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மருத்துகளை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் ஏற்கனவே இலங்கையுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்தும் இருநூறு வகையான மருந்துகள் மற்றும் விசேடமாக கொரோனா தொற்று நீக்கல் மருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment