கொரோனா வைரஸ் போலி தகவல் பகிர்ந்த பல்கலை நிர்வாக உத்தியோகத்தர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

கொரோனா வைரஸ் போலி தகவல் பகிர்ந்த பல்கலை நிர்வாக உத்தியோகத்தர் கைது

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் போலியான செய்தியை வெளியிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான நபர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன. 

நபரொருவர் திங்கட்கிழமை தனது முகப்புத்தக பக்கத்தில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பதிவிட்டிருந்தார். 

இது தொடர்பில் குற்றத் தடுப்பு பிரிவினரால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணைகளுக்கு அமைய செவ்வாய்க்கிழமை மஹரகம பிரதேசத்தில் 40 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனமொன்றின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவராவார். இவர் சுமார் 8 வருடங்கள் அவுஸ்திரேலியாவில் வசித்தவர் என்பதோடு பட்டதாரியுமாவார். 

இவர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இவ்வாறு போலியான செய்திகளை வெளியிட்டு கைது செய்யப்பட்ட இருவரில் முச்சக்கர வண்டி சாரதியும், முடி வெட்டும் தொழில் செய்யும் சாதாரணமானவர்களாவர். எனினும் இவர் பட்டதாரியொருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது போன்ற செயற்பாடுகள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இது போன்ற நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 

மேலும் ஒரு மாவட்டத்திலிருந்து பிரிதொரு மாவட்டத்திற்குச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது. 

ஊரங்கு சட்டம் நீக்கப்படும் சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிரதேசத்திலிருந்து பிரிதொரு பிரதேசத்திற்குச் செல்ல முடியாது. 

அத்தியாவசிய சேவை, சுகாதார சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. 

அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்களில் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யாமலிருப்பவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்டோர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானவர்கள் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்க முடியும். 

மேலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போது நீர், மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்டவை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment