அரசியல் ரீதியாக தமக்கு விருப்பமானவர்களுக்கு பதவிகளை வழங்குவதற்கான இடமாக அரச நிறுவனங்களை பயன்படுத்திய யுகத்தை மாற்றுவதற்கு தன்னால் முடிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களை பலப்படுத்தி அவற்றை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவந்த அனுபவம் வாய்ந்தவர்கள் இன்று எவ்வித சலுகைகளுமின்றி அரச நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கு தம்முடன் இணைந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சில அரச நிறுவனங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தனக்கு விடுத்த சவாலை வெற்றி கொள்வதற்கு அனைத்து அரச அதிகாரிகளும் ஒன்றிணைய வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரச நிறுவனங்கள் பலமாகவும் முறையாகவும் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து அரச நிறுவனங்களினதும் அதிகாரிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடல் தொடரின் 3வது கலந்துரையாடலாக மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தொலைநோக்கு மற்றும் இலக்குகள் குறித்தும் அரச சேவையின் தொலைநோக்கு, பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்துவது இக்கலந்துரையாடல் தொடரின் நோக்கமாகும்.
மக்கள் மைய ஆட்சிக்காக அரச நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களது எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரச சேவையினதும் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களினதும் பொறுப்பு மக்கள் வாழ வழி செய்வதும் அதற்கு தேவையான பின்புலத்தை அமைத்துக் கொடுப்பதுமாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
No comments:
Post a Comment