கொரோனா தொடர்பில் டுவிட்டரில் இந்தியப் பிரதமர் வழங்கிய யோசனையை ஆமோதித்து மறுபதிவிட்டார் ஜனாதிபதி கோத்தபாய - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

கொரோனா தொடர்பில் டுவிட்டரில் இந்தியப் பிரதமர் வழங்கிய யோசனையை ஆமோதித்து மறுபதிவிட்டார் ஜனாதிபதி கோத்தபாய

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடத்தக்க வலுவான நுட்பம் குறித்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆராய வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் யோசனையொன்றை முன் வைத்துள்ளார். 

இந்நிலையில் அதனைப் பாராட்டியிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தற்போதைய கடினமான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைவதுடன், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். 

உலகையே கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலுக்கிக் கொண்டிருக்கும் பின்னணியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

'கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடக்கூடிய வலுவான நுட்பம் தொடர்பில் சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கலந்தாலோசிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கின்றேன். எமது நாடுகளின் பிரஜைகளை ஆரோக்கியமாகப் பேணுவதற்கான வழிகள் தொடர்பில் நாம் வீடியோ தொடர்பின் ஊடாக ஆராய முடியும். நாமனைவரும் ஒன்றிணைந்து முழு உலகத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியை வழங்கமுடியும் என்பதுடன், ஆரோக்கியமான உலகொன்றுக்கு எமது பங்களிப்பையும் வழங்கமுடியும்'. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவைச் சுட்டிக்காட்டி மறுபதிவொன்றைச் செய்திருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, அப்பதிவில் கூறியிருப்பதாவது.

'இத்தகையதொரு சிறந்த யோசனைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்குத் தயாராக இருப்பதுடன், எமது அனுபவங்களையும் செயற்திட்டங்களையும் பகிர்ந்து கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்கின்றோம். அதேவேளை ஏனைய சார்க் உறுப்பு நாடுகளிடமிருந்து பல்வேறு விடயங்களை அறிந்து கொள்வதற்கும் ஆர்வம் கொண்டிருக்கின்றோம். தற்போதைய கடினமான சூழ்நிலையில் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் ஒன்றிணைந்து, எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்'

No comments:

Post a Comment