ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கும், சுகாதாரத் துறையில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு காரணத்துடன் ஆலோசனை வழங்கினார் ரணில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கும், சுகாதாரத் துறையில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு காரணத்துடன் ஆலோசனை வழங்கினார் ரணில்

(எம்.மனோசித்ரா) 

இலங்கை கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. ஊரடங்கு சட்டத்தை நீடித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டால் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.டி.எச் வைத்தியசாலையில் புதிதாக ஒரு கட்டடம் நிர்மாணிக்கப்படுவதோடு சிகிச்சைக்கு தேவையான சுகாதார ஆடைகள் மற்றும் முகக் கவசம் என்பவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்திலேயே அவர் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலில் இன்று நாம் இரண்டாம் கட்டத்திற்கு முகங்கொடுத்துள்ளோம். இதனை நினைவில் கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும். இரண்டாம் கட்டத்தை கடப்பதற்கான முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமானால் முதலாம் கட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதோடு இரண்டாம் கட்டத்தை முற்றாக முகாமை செய்ய முடியும். 

ஐரோப்பா, ஜேர்மன் போன்ற நாடுகளில் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு வைரஸ் பரவல் தீவிர நிலையை அடையவில்லை. நூற்றுக்கு 10 வீத உயிரிழப்புக்களே பதிவாகியிருக்கின்றன. 

அதுபோன்று நாமும் குறுகிய காலத்திற்குள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் மேலும் சில காலம் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வினைப் பெற முடியும். அத்தோடு அரச சேவையாளர்களுக்கும் விடுமுறை நீடிக்கப்பட வேண்டும். 

மேலும் சுகாதாரத் துறையில் பிரதானமாக மூன்று விடயங்கள் பின்பற்றப்பட வேண்டும். முதலாவதாக பரிசோதனை அத்தியாவசியமானதாகும். காரணம் கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தொழில் புரியும் இடங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இவை அதிகரிப்பதால் நாட்டில் எவ்வித பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. இதே போன்று கட்டில்கள் உள்ளிட்டவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இறுதியாக வெளிநாடுகளிலிருந்து மருந்து உள்ளிட்ட மருத்துவ வசதிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

சிகிச்சையின் போது அணியும் ஆடைகள் முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பற்றியும் சிந்திக்க வேண்டும். இது ஒருபுறம் இறக்குமதி சுமையை குறைக்கும் என்பதோடு உள்நாட்டு வருமானத்திற்கும் வழிவகுக்கும். 

அத்தோடு தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் இன்னொரு கட்டடம் நிர்மாணிக்கப்படுதல் சிறந்ததாக அமையும் என்பது எனது நிலைப்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment