பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளை கவனத்திற் கொண்டு இலங்கைக்கான அபிவிருத்தி தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் சீன அரசாங்கம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்கன் டொலரை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கான ஒப்பந்தக் கைச்சாத்து நேற்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் மேற்படி 500 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதி அடுத்த வாரம் முற்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சீன அபிவிருத்தி வங்கி மூலம் இந்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் சீன அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வெங் வெய் ஆகியோரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
சீன தூதரக அதிகாரிகளான ஹூவெய் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் மா ஷிங் ஆகியோரும் மேற்படி உடன்படிக்கை நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க 2020 அந்நியச் செலாவணி நடைமுறை நிதி வசதிக்காக சீன அரசாங்கத்தினால் சலுகை அடிப்படையிலான நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இலகு வட்டியின் கீழ் மீள செலுத்தும் காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 500 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதி அடுத்தவாரம் முதல் பகுதியில் கிடைக்கவுள்ளதுடன், அதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பலப்படுத்தப்படுமென்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment