ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 4 பேரின் மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 12, 2020

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 4 பேரின் மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிணை முறி மோசடி தொடர்பிலான வழக்கிற்கு அமைய, அவர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள பிடியாணையை இடைநிறுத்துமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் இன்றையதினம் (12) மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டாவது நாளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனு நேற்றையதினம் (11) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, இன்றும் இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக, நாளை (13) இம்மனுக்களை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு தெரிவித்து ரிட் மனு (writ petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு.

சட்ட மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான பிடியாணைக்கு எதிராக, முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், மத்திய வங்கி அதிகாரியான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரது சட்டத்தரணியான சமன் குமார ஆகியோரர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad