சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிப்பு - போக்குவரத்து அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிப்பு - போக்குவரத்து அமைச்சு

மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரையான காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (16) சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக, மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, வேரஹெர போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் அல்லது ஏனைய போக்குவரத்து திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தருவது எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்திருந்தது.

அத்துடன், இன்று (17) முதல் மார்ச் 31ஆம் திகதி வரை, சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள் செயல்படாது எனவும், ஏற்கனவே தினம் ஒதுக்கப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சைகள் மற்றும் பிரயோக பரீட்சைகளும் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இக்கால எல்லைக்குள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல், உள்ளிட்ட தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானங்களை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் இவ்வறிவித்தலை போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment