ஏப்ரல் 26 ஆம் திகதி சூரிய உதயத்தின்போது இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

ஏப்ரல் 26 ஆம் திகதி சூரிய உதயத்தின்போது இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும்

"ஏப்ரல் 26 ஆம் திகதி சூரிய உதயத்தின்போது இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும். அதன் பின்னர் சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும். எனவே, புது யுகம் நோக்கி பயணிக்க மக்கள் தயாராக வேண்டும்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியவில் இன்று (03.03.2020) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களமும் சூடுபிடித்து வருகின்றது. கடந்த நான்கரை வருடங்களாக மக்களுக்கு இரவு - பகல் பாராது பல வழிகளிலும் சேவைகளை செய்துவிட்டு இன்று உரிமையுடன் உங்களில் ஒருவனாக நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

ஆனால் கண்டி மாவட்டத்தின் ஆரம்பம் எது, முடிவு எது என்று கூட தெரியாத பரசூட் வேட்பாளர்கள், மழைக் காலத்தில் முளைக்கும் காலான்கள் போல இங்கு வந்து, தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழர்களின் உரிமை அரசியலுக்கு வேட்டு வைப்பதற்கு முயற்சிக்கின்றனர். 

பேரினவாதிகளின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக சமூகத்தையே காட்டிக் கொடுக்க துணிந்துள்ள இந்த இனத்துரோகிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

அத்துடன், உண்மையாக சமூகத்துக்காக சேவையாற்றக் கூடிய அரசியல்வாதிகள் யார், கருப்பாடுகளாக வந்துள்ளவர்கள் யார் என்பதை கண்டித் தமிழர்கள் நன்கு பகுத்தறிந்து வைத்துள்ளனர். எனவே, வாக்குரிமை என்ற பலம் பொருந்திய ஜனநாயக ஆயுதத்தின் ஊடாக இம்முறை தக்கபதிலடி கொடுப்பார்கள். 

அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியில் பலம் பொருந்திய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இணைந்துள்ளன. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு பயணிக்ககூடிய ஒரேயொரு அரசியல் கூட்டணி இதுவாகும்.

இன ஐக்கியத்தை உறுதிப்படுத்தாவிட்டால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. இவ்விரண்டையும் செய்யாவிட்டால் தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க முடியாது. எனவே, இந்த மூன்று விடயங்கள் தொடர்ந்தும் கவனம் செலுத்தி ஒன்றாய் முன்நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் எதுவுமே முடியாது என்பதை 100 நாட்களுக்குள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி விட்டனர். இனவாதத்தை மட்டுமே நம்பி இம்முறையும் தேர்தலில் குதிக்கின்றனர். ஆனால், எமது சிங்கள சகோதரர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். உணர்வுகளை தூண்டிவிட்டு வாக்கு வேட்டை நடத்தும் தந்திரம் இனியும் எடுபடாது.

எனவே, ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் அதாவது 26 ஆம் திகதி சூரியன் உதயமாகும்போது எமது வெற்றியும் உறுதியாகியிருக்கும். கடந்த முறைபோலவே இம்முறையும் எமக்கு நாவலப்பிட்டிய மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்கள்." - என்றார்.

No comments:

Post a Comment