தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இன்று (10) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ள இலங்கைப் பிரஜைகள் 179 பேர் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 02 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களிலும் நாட்டை வந்தடைந்த 181 பேரை மட்டக்களப்பு Batticaloa Campus இல் கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலியிலிருந்து 15 பயணிகளை ஏற்றிய விமானமொன்று இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. அத்துடன், 166 பயணிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை தென் கொரியாவிலிருந்து நாட்டை வந்தடைந்திருந்தது.
இக்குழுவினர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் அவசியம் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள். இதற்கமைய அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்துவருவோரை கொரோனா தொற்றுத் தொர்பில் பரிசோதனை மேற்கொள்வதற்கு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருந்தது.
இந்நிலையில் குறித்த தனிமைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோரை அழைத்துச் சென்று அங்கு 14 நாட்கள் தங்க வைத்து கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரானில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பிலுள்ள ஹிஸ்புல்லாஹ் தனியார் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்கு வீடுகளில் தங்கியிருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment