சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக மாநாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் பிணை வழங்கியுள்ளதை சவாலுக்குட்படுத்தி, சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீளாய்வு விண்ணப்பத்திற்கான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி வழங்கும்.
மேற்படி வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
சட்ட மா அதிபரின் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவிக்கையில், சந்தேக நபரை பிரதான மாஜிஸ்திரேட் பிணையில் அனுப்பிய போது சந்தேக நபரிடம் இருந்து பொலிஸார் எந்தவொரு வாக்கு மூலத்தையும் பெற்றிருக்கவில்லை என்றும், பிணையில் அனுப்ப முன்னர் சந்தேக நபரின் உடல் நிலை தொடர்பான மருத்துவ சான்றிதழ் கேட்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனால், சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு மீளப்பெறப்பட்டு சந்தேகநபர் உடனடியாக மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சந்தேக நபரான ராஜித சேனாரத்னவின் சார்பில் ஆஜரான அனில் சில்வா தெரிவிக்கையில், சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணை சட்ட ரீதியானது என்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிணை வழங்கக் கூடியவை என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment