ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் M.R.லத்தீப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் M.R.லத்தீப்

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் M.R.லத்தீப் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 41 வருடங்கள் அவர் பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளார்.

குற்றத் தடுப்பு, திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்தல், போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் ஆகியவற்றிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக M.R.லத்தீப் கடமையாற்றியுள்ளார்.

பொலிஸ் விசேட பிரிவு, இடை இராணுவ பிரிவான விசேட படையணி ஆகியவற்றின் கட்டளையிடும் அதிகாரியாக 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி தொடக்கம் அவர் சேவையாற்றியுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஆரம்ப கால உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

பிரித்தானியாவின் SAS கொமடோர் படையணியின் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும், KNS ஆலோசகர்களின் மாற்று சிந்தனையாளர் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு, பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் இவர் விசேட பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரிக்கு மேலதிகமாக 2017 ஆம் ஆண்டு தொடக்கம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவு ஆகியவற்றிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் M.R.லத்தீப் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பாதாள உலகக் குழுக்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகளுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான M.R.லத்தீப் இலங்கை பொலிஸின் ரகர், கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட அணிக​ளை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.

அரச புலனாய்வு மற்றும் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சபை மற்றும் சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் முதலாவது செயலாளராக M.R.லத்தீப் சேவையாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment