மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டி - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டி

செயலாளர் பசில் ராஜபக்‌ஷ

விமல் வீரவங்ச, தயாசிறி ஜயசேகர தேசிய அமைப்பாளர்கள்

சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் 9 கட்சிகள் இணைந்து கூட்டணி

'ஶ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய' கட்சியை பதிவு செய்யும் ஆவணம் தேர்தல் செயலகத்தில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 'ஶ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய' (ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு) கட்சியில் மொட்டு சின்னத்தில் போட்டியிட, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் தீர்மானித்துள்ளன.

குறித்த கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்றையதினம் (17) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தேர்தல்கள் செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரு கட்சிகளின் செயலாளர்களும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தினர்.

அத்துடன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள இக்கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வும், தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குறித்த இரு கட்சிகள் உள்ளிட்ட மேலும் 9 கட்சிகள் இணைந்து இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இக்கட்சியின் செயலாளராக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகர ஆகியோர் தேசிய அமைப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 8ஆவது சரத்தின் அ பிரிவின் கீழ் குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தற்போது கையளித்துள்ளதாக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்ததோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியை ஈட்டும் நோக்கில் மொட்டு சின்னத்தில் இக்கட்சி களமிறங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மிகவும் ஒத்துழைப்புடன் இரு கட்சிகளும் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad