ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் விளக்கமறியல் நீடிப்பு - விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் எங்கே? - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் விளக்கமறியல் நீடிப்பு - விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் எங்கே?

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் இருந்து அழைத்துவரப்பட்ட உதயங்க வீரதுங்க, இன்று முற்பகல் 9.45 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 5 வருடங்களாக இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஹால் பிரான்சிஸ் தற்போது எங்கே உள்ளார் என நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வினவினார்.

குறித்த அதிகாரி தற்போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் பணியாற்றுவதாக இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது.

பதில் பொலிஸ் மா அதிபரின் அனுமதியின் பேரில் இந்த விசாரணைகளுக்காக நிஹார் பிரான்சிஸை அழைக்க முடியும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு எத்தகைய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது என நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வினவினார்.

இதற்கு முன்னர் பொது உடமைகள் சட்டம் உள்ளிட்ட மேலும் சில சட்டங்களின்கீழ் வழக்கு நடத்திச் செல்லப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பதிலளித்துள்ளது.

மிக் விமான கொடுக்கல் வாங்களின்போது பொது உடமைகள் சட்டத்திற்கமைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணம் என்னவென நீதவான் இதன்போது வினவியுள்ளார்.

அரசாங்கத்திற்கு 25,000 ரூபா நட்டம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில்கூட மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்ற நிலையில் 7 மில்லியன் டொலர் நட்டம் தொடர்பில் ஏன் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என நீதவான் மேலும் வினவியுள்ளார்.

பொது உடமை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கள் உதய வீரதுங்கவிற்கு எதிராக சுமத்தப்படாதமையால் அவருக்கு பிணை வழங்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளை அரசாங்கம் முடக்கியுள்ளதால் அவரிடம் ஒரு சதமேனும் இல்லை என சட்டத்தரணி கூறியுள்ளார்.

விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் சந்தேகநபர் தனியார் வங்கியொன்றில் பேணி வருகின்ற கணக்கொன்றில் பெருந்தொகை பணம் உள்ளதாகவும் அதனை தம்மால் கணக்கிட முடியாது எனவும் நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி வரை சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மிக் (MiG) விமான கொள்வனவில் இடம்பெற்ற அரசாங்க நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் உதயங்க வீரதுங்க, கடந்த 14 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment