தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பு மோதர பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியில் இன்று (14.02.2020) மீன் விற்பனை நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் நாடாளாவிய ரீதியில் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தரமான கடலுணவுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குறித்த விற்பனை நிலையங்களை ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இதேபோன்ற விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் கூறினார்.
பொதுமக்களுக்கு தரமான கடலுணவுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த காலங்களில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இயக்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த கால ஆட்சியின்போது அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல் மற்றும் குறுகிய சிந்தனைகளினால் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனமும் பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டிருந்தது.
இதனால் தொடர்ச்சியாக நாடாளவிய ரீதியில் மீன் விற்பனை நிலையங்களை இயக்க முடியாத சூழலில் அவற்றின் செயற்பாடுகள் கைவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட புதிய அரசாங்கம் அரச கட்டமைப்புக்கள் அனைத்தையும் மீண்டும் வினைத்திறன் மிக்கவையாக மாற்றும் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என்றார்.
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு மற்றும் அதனுடைய அதிகாரதத்திற்குட்பட்ட நிறுவனங்களை மீளக் கட்டியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment