எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாம் இனமத பேதமின்றி அபிவிருத்திகளோடு நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்பது கட்டாய கடமையாகும். எதிர்கால சமுதாயத்துக்கு இனவாத மதவாத பிரிவினைகளை விதைக்காமல் ஒற்றுமையோடு ஓர் தாய்நாட்டுப் பிள்ளைகள் என்ற உணர்வூட்டி வளர்ப்பது பெற்றோகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகளின் போன்றவர்களின் கடமையாகும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
நாட்டின் 72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரையறுக்கப்பட்ட மீராவோடை பதுரியா மாஞ்சோலை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வும் முச்சக்கர வண்டிகளின் பேரணியும் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்றது.
வரையறுக்கப்பட்ட மீராவோடை பதுரியா மாஞ்சோலை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மௌலவி ஏ.ஏ.எம்.ஜமீல் தலைமையில் மீறாவோடை பொதுச்சந்தை முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை நிதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள், மதப் பெரியார்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், உரையாற்றுகையில் 30 ஆண்டு காலமாக எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர்ச் சேதங்கள், பொருளாதார சேதங்கள் போன்றவைகளை கடந்து அடக்கு முறைக்குள் வாழ்ந்து வந்தோம்.
அன்று சிறந்த ஆட்சியை நிலை நாட்டிய தற்போதுள்ள எமது நாட்டின் ஜனாதிபதியும், பிரதமர் ஆகியோரின் விடா முயற்சியின் பலனாக நாம் மீண்டுமொறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தோம். இத்தருணத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமர் அவர்களுக்கும் நன்றிகளையும் பராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திரக்காற்று தொடர்ந்து வீசுவதற்கு நாம் இனவாதம் மதவாதம் பேசாது ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும். போதையற்ற நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் வேலையில்லா இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவது எமது அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.
அதன் அடிப்படையில் நாமும் எமது நாட்டின் நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் பல தொழிற் பேட்டைகளை உருவாக்கி பல்லாயிரம் இளைஞர்களுக்குரிய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.
இவ்வாறான திட்டங்களுக்கு அனைவரும் கைகோர்த்து சுதந்திரம் எனும் காற்றை நிம்மதியாக சுவாசிக்க ஒற்றுமை எனும் பாதையில் பயணிப்போம் என தனது உரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment