இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம், திறப்பு விழாவில் பங்கேற்க ஆசையெனில் நான் வீடுகளை முழுமைப்படுத்திய பின்னர் சென்று திறவுங்கள் - அமைச்சர் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம், திறப்பு விழாவில் பங்கேற்க ஆசையெனில் நான் வீடுகளை முழுமைப்படுத்திய பின்னர் சென்று திறவுங்கள் - அமைச்சர் தொண்டமான்

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத்திட்டம் எவ்வித குறைப்பாடுகளும் இன்றி மிகவும் நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்படும். மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் காலத்தில் பெயர் போட்டுக்கொள்வதற்காக இன்னமும் முழுமைப்படுத்தப்படாத வீடுகளை சிலர் திறந்து வைத்து வருகின்றனர். இப்படியான செயல்களில் ஈடுபட்டு இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை அட்டன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றது. இதன்போது 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தொண்டமான் மேலும் கூறியதாவது, இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்தது. அதன்பின்னர் மேலும் 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது பாரத பிரதமரை சந்தித்து வீடமைப்பு திட்டம் பற்றி கலந்துரையாடினேன்.
குறிப்பாக எமது மக்களுக்கு இன்னும் 2 இலட்சம் வீடுகள் தேவைப்படுவதால் அடுத்த கட்டமாக வீடமைப்பு திட்டங்களுக்கு உதவியளிக்கும் போது கூரை வீடுகளுக்கு பதிலாக ´சிலப்´ வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினேன். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரினார். குறித்த அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.

இந்திய அரசாங்கம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு மட்டுமே நிதி வழங்கும். தண்ணீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின்போது இந்த நடைமுறை உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.

எனவே, வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும்போதே வீதி, மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை பெறுவதற்கான வேலைத்திட்டமும் எம்மால் ஆரம்பிக்கப்படும். சாவியை பயனாளியிடம் கையளிக்கும்போது அது முழுமைப்படுத்தப்பட்ட வீடாக இருக்கும். வீடமைப்பு திட்டத்துக்கு பொறுப்பாக ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி இருக்கின்றார். எனவே, ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் தாராளமாக அறிவிக்கலாம்.

அதேவேளை, சிலர் தற்போது வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுவருவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. வீடுகளை திறவுங்கள். அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால், தண்ணீர், மின்சாரம், மலசலகூடம் என அடிப்படை வசதிகளை எதனையும் ஏற்படுத்திக் கொடுக்காத வீடுகளை திறந்து, இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என கோருகின்றேன்.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் பெறுமதி அறியாமல் செயற்படாதீர்கள். திறப்பு விழாவில் பங்கேற்க ஆசையெனில், நான் வீடுகளை முழுமைப்படுத்திய பின்னர் சென்று திறவுங்கள். எமக்கு அவர்களைப்போல் சில்லறை புத்தி கிடையாது.

கடந்த ஆட்சியின்போது இடம்பெற்றதுபோல் கட்சி அடிப்படையில் வீடுகள் வழங்கப்படாது. குருவி கூடுகள்போல் வீடுகளும் நிர்மாணிக்கப்படாது. சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றை உரிய வகையில் பின்பற்றுமாறு தோட்ட முகாமையார்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். நலன்புரி அதிகாரி ஊடாக அது நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு தோட்டத்தை எடுத்துக்கொண்டால் முதலில் வீடு இல்லாதவர்களுக்கு அதன் பின்னர் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்தால் அவர்களுக்கு, அதன் பின்னர் ஏனையோருக்கு என உரிய நடைமுறை பின்பற்றப்படும். 

அதேபோல் லயன் ஒன்றை தேர்வு செய்து அங்குள்ளவர்களுக்கு முழுமையாக வீடுகள் கட்டப்பட்ட பின்னர் அந்த லயன் உடைக்கப்படும். ஏனெனில் இந்திய வம்சாவளி மக்களை லயன் யுகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதையே இந்திய அரசாங்கம் விரும்புகின்றது. " என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment