தரத்தைப் பாதுகாக்கும் வானொலிக் கலையை உருவாக்குவது அனைத்து வானொலி அலைவரிசைகளினதும் பொறுப்பாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நேற்று மாலை இடம்பெற்ற இவ்வாண்டுக்கான வானொலி அரச விருது விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிரேஷ்ட சங்கீதக் கலை, இலக்கிய சம்பிரதாயம், நாடக கலை உள்ளிட்ட பல விடயங்களை அன்றிருந்த வானொலிக் கலைஞர்களால் இலங்கை சமூகத்திற்கு அறிமுகப்படுத்த முடிந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் இருந்து கற்று நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தரமாகவும் சிறந்த மொழி நடையிலும் இலங்கை சமூகத்தை போஷிப்பது வானொலி நிறுவனங்களின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிக உயர்ந்த இடமான எவரெஸ்ட் மலைக்கு ஏறிய முதலாவது நபரான எட்மென் ஹிலரி செவிமடுத்த ஒரேயொரு வானொலி தேசிய வானொலியாகும்.
தேசிய வானொலி 1925 ஆம் ஆண்டு முதல் தனது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது. இலங்கையில் வானொலியை ஆரம்பித்து 95 வருடங்களாகின்றன. அன்றிலிருந்து மொழியை வளர்ப்பதற்கு வானொலி உயர்ந்தபட்ச பங்களிப்பை வழங்கியுள்ளது.
சிறந்த இசை சம்பிரதாயம் ஒன்றை உருவாக்குவதற்கும் தேசிய வானொலி அத்திவாரமிட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். எல்பின்ஸ்டன் அரங்கு நாடக கலைஞர்களுக்கு சலுகை முறையின் கீழ் பயிற்சி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வானொலி அரச விருது விழாவின் போட்டிப் பிரிவுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு 17 விருதுகள் கிடைத்துள்ளன.
புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் பொறுப்பில் இயங்கும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இலங்கை கலைக் கழகம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. பிரபல ஒலிபரப்பாளர்கள் பீ.எச்.அப்துல் ஹமீத், பாலித்த பெரேரா, ஆரியசேன மில்லி விதானாச்சி ஆகியோர் அதியுயர் பிரணாம பிரதீபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மறைந்த அறிவிப்பாளர் குஸூம் பீரிஸ் ஞாபகார்த்த விருதை முதற்தடவையாக தயா டி அல்விஸ் பெற்றுக் கொண்டார்.
தமிழில் சிறந்த கலையக அறிவிப்பாளருக்கான விருது நாகபூஷணிக்கும், சிறந்த நாடக நடிகைக்கான விருது ஞெய்ரஹீம் ஷஹீட்டுக்கும், சிறந்த பல்சுவை நிகழ்ச்சிக்கான விருது யாழ் எவ்எம்-ஐச் சேர்ந்த சண்முக நாதன் மனோகரனுக்கும், சிறந்த ஆரம்பக் குறியிசைக்கான விருது மொஹம்மட் இஸ்மயில் மொஹம்மட் இர்பானுக்கும், சிறந்த வானொலி நேர்முக வர்ணனையாளருக்கான விருது லூக்கஸ் திருச்செல்வத்திற்கும் கிடைத்தன. ஜெயரஞ்சன் யோகராஜ் சிறந்த ஆங்கில செய்தி ஆசிரியருக்கான விருதை வென்றார்.
சிங்களத்தில் ஆண், பெண் பிரிவுகளில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதுகளை ஞானிந்த பெரேரா, சித்ரா குமாரி பத்தப்பெரும ஆகியோர் வென்றார்கள். சிறந்த கலையக அறிவிப்பாளருக்கான விருதை சம்பத் சல்பிட்டிகோரளவும், சிறந்த உரைஞருக்கான விருதை ஹிமானந்த ராஜபக்ஷவும் பெற்றுக் கொண்டார்கள்.
சிங்கள நாடகப் பிரிவில் சிறந்த தயாரிப்பிற்கான விருது வஜிர இந்திக்க கருணாரட்னவிற்கும், சிறந்த நாடகப் பிரதிக்கான விருது ஏ.கே.மலிந்த தேஷப்ரியவிற்கும், சிறந்த நாடக நடிகருக்கான விருது ஆர்.ஏ.லால் சரத் குமாரவிற்கும், சிறந்த நாடக நடிகைக்கான விருது நீலிக்கா மத்துமகேயிற்கும் கிடைத்தன. சிறந்த வானொலி நாடகக் கலைஞருக்கான விருதை மலையக சேவையைச் சேர்ந்த எஸ்.கே.சச்சிந்தனி பாக்யா சமரதிவாகர பெற்றுக் கொண்டார்.
சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருது ரஜரட்டை சேவையைச் சேர்ந்த டபிள்யூ.டபிள்யூ.எம். ஜீவந்தா விஜேசிறி, சிறந்த ஒலிக்கலவைக்கான விருது தரிந்து திசாநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment