மலையக மக்களுக்கான உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும், பாரத பிரதமரின் உள்ளத்தில் உங்கள் அனைவருக்கும் பிரத்தியேக இடமுண்டு - இந்திய பதில் உயர்ஸ்தானிகர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

மலையக மக்களுக்கான உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும், பாரத பிரதமரின் உள்ளத்தில் உங்கள் அனைவருக்கும் பிரத்தியேக இடமுண்டு - இந்திய பதில் உயர்ஸ்தானிகர்

பெருந்தோட்டப் பகுதிகளில் 14 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான உறுதிமொழியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே வெளிஓயா பகுதியில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது. எஞ்சிய நிர்மாணப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் - என்று இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப் தெரிவித்தார்.

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்திலும் உதவிகள் தொடரும் என உறுதியளித்த உயர்ஸ்தானிகர், பாரத பிரதமரின் உள்ளத்தில் உங்கள் அனைவருக்கும் (மலையக மக்களுக்கு) பிரத்தியேக இடமுண்டு எனவும் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை ஹட்டன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றது.

இதன்போது 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

"இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவுக்கு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வியத்தின்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் இணைந்திருந்தார். மிகவும் முக்கிமான விடயங்கள் இரு தரப்புகளுக்குமிடையில் கலந்துரையாடப்பட்டன.

2017 ஆம் ஆண்டில் பாரத பிரதமர் இங்குவந்தபோது அவருக்கு உணர்வுப்பூர்வமான வரவேற்பை அளித்தீர்கள். அதனை இன்னும் அவர் நினைவில் வைத்துள்ளார். குறிப்பாக உங்கள் அனைவருக்கும் அவரின் இதயத்தில் தனியான இடமுண்டு.

இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் வெளிஓயா தோட்டத்தில் 50 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மேலும் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது.

இந்திய வீட்டுத்திட்டமானது ஏனையவற்றிலிருந்து மாறுபட்டு காணப்படும் என்பதுடன் வெற்றிகரமான திட்டமாகும். அதனை முழுமைப்படுத்துவதற்காக மக்கள், அரசாங்கம், அமைச்சு ,தோட்ட நிர்வாகம் என அனைத்து தரப்புகளினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம்.

அந்தவகையில் அனைவரினதும் வினைத்திறன்மிக்க ஈடுபாடுமூலம் 50 வீடுகளை விரைவில் பூரணப்படுத்த முடியும் என நம்புகின்றேன். இவற்றை கண்காணிப்பதற்கு வருகைதருவோம். இவை கட்டப்பட்ட பின்னர் 100 வீடுகளும் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

பெருந்தொட்டப்ப 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை இந்தியா வழங்கியுள்ளது. அதன்ஓர் அங்கமே இந்த வீட்டுத்திட்டம். எஞ்சிய நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கின்றேன்.

மலையக மக்களுக்காக கல்வி, சுகாதாரம், தொழில்பயிற்சி, புலமைப்பரிசில் என முக்கியமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து எதிர்காலத்திலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும்." என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment