(செ.தேன்மொழி)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது வருட நினைவு தின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகொள் விடுத்தார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உயிர்த் ஞாயிறு தின தாக்குதல்களின் போது 300 அளவிலானோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரை காயமடைந்திருந்தனர்.
இதன்போது நாடு பூராகவும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான சந்தரப்பத்திலே நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவித பேதமுமின்றி உதவி ஒத்தாசைகளையும் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வருட பூர்த்தி இன்னும் இரு மாதங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் கத்தோலிக்க திருச்சபையினால் நினைவு தினத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதுடன், 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புனித ஜொசப் வித்தியாலயத்தில் தியானம் மற்றும் ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருப்பதுடன், இறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியை வேண்டி இலத்தின் மொழியிலான பாடல்களும் பாடப்படவுள்ளன.
இதன்போது சுமார் 2000 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குப்பற்றவிருக்கின்றனர். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மாதம்பிட்டி மயானத்திலும், 5 மணிக்கு கனத்த மயானத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூபிகள் திறக்கப்படவுள்ளன.
மறுநாள் தொடக்கம் கொச்சிகடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் இவை 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் ஆரம்பிக்கப்படும் நிகழ்வுகள் மறுநாள் 21 ஆம் திகதி காலை 8.45 வரை இடம்பெறும்.
பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிமுக நிகழ்வு இடம்பெறுவதுடன், இதனையடுத்து உயிரிழந்தவர்களை நினைவு படுத்தும் வகையில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்படும்.
இதன்போது நாட்டிலுள்ள அனைவரையும் இந்த செயற்பாட்டுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், ஆலையங்கள் மற்றும் விகாரைகளிலுள்ள மணிகளை ஒலிக்கச் செய்து ஏனையோருக்கு விழிப்பு ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கு பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றுதல், ஆராதனை பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இவ்வாறான ஆராதனைகள் இடம்பெறவிருப்பதுடன், சீயோன் தேவலாயத்திலும் இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.இதுபோன்ற அழிவு மீண்டும் நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் உண்மைத் தன்மையை அரசாங்கத்தினர் தனது அரசியல் இலாபத்திற்காக மறைத்து வருகின்றார்களோ என்ற எண்ணம் எமக்கு எழுந்துள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
தாக்குதல் தொடர்பாக முன்னரே தகவல் கிடைத்திருந்த போதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பான காரணம் தொடர்பிலும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment