முதலாம் தவணைப் பரீட்சை கிடையாது : விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை - 2ஆம், 3ஆம் தவணைகளில் மாத்திரம் பரீட்சைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 25, 2020

முதலாம் தவணைப் பரீட்சை கிடையாது : விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை - 2ஆம், 3ஆம் தவணைகளில் மாத்திரம் பரீட்சைகள்

எதிர்வரும் காலங்களில், பாடசாலைகளில் முதலாம் தவணையின் போது, தவணை பரீட்சைகளை நடாத்தாதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு உற்சவங்கள் மற்றும் வேறு விடயங்களுக்கான செயற்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இவ்விடயம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள், முதலாம் தவணைப் பரீட்சையின் போது எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி பரீட்சைகளுக்கு தோற்றுவதாகவும், ஒரு சில மாணவர்கள் பரீட்சைகளில் பின்தங்கலாம் எனக் கருதி, கல்விச் சுற்றுலா, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட விடயங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் நிலைமைகள் அதிகமாக அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஒரு சில மாணவர்களின் பெற்றோர்கள் தலையீடு செய்து, அவர்களை விளையாட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகச் செய்கின்ற விடயங்களும் இடம்பெறுகின்றன.

அத்துடன், கற்றல் கற்பித்தலுடன் பல்வேறு செயற்பாடுகளும் இடம்பெறுவதால், பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் முதலாம் தவணை பாடசாலை காலப்பகுதியின் போது அதிக வேலைப்பழுவுடன் காணப்படுகின்றனர்.

இவ்வாறான அனைத்து காரணங்களையும் கருத்திற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் முதலாம் தவணையின் போது அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் இவ்வருடத்திற்கான முதலாம் தவனைப் பரீட்சையை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் முதலாம் தவணைப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment