இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன்

திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி தங்கராசா மனோகரன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் மொஹிதீன் முகம்மது நிபாஸ் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கு விசாரணையின் போது, மூதூர் 58ஆவது இராணுவ முகாமில் லான்ஸ் கோப்ரலாக கடமையாற்றிக் கொண்டிருந்த மொஹிதீன் முகம்மது நிபாஸ் என்பவருடன் மூன்று இராணுவ வீரர்கள் கடமையில் இருந்ததாகவும் அந்த இடத்தருகே சைக்கிள் திருத்துமிடம் காணப்பட்டதாகவும், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்து கொண்டு பாரதிபுரம் வீதியூடாக தங்கராசா மனோகரன் என்பவர் சென்று கொண்டிருந்தபோது அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் இறந்துவிட்டார் என்பதை தென்னை மட்டையொன்றினால் உடலை புரட்டிப் பார்த்ததாகவும் சாட்சியமளிக்கப்பட்டது.

இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது கடமையாற்றிக் கொண்டிருந்த இடத்திலிருந்து இராணுவ முகாமுக்கு செல்லாமல் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் அவரை கைது செய்ததாகவும் பொலிஸ் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. இதன்படி குறித்த நபருக்கு 10 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் தீர்ப்பளித்தார்.

ரொட்டவெவ நிருபர்

No comments:

Post a Comment