(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் பறிக்கும் கும்பல்களிடமிருந்து இளைஞர் யுவதிகள் ஏமாந்து விடாமல் விழிப்பாக இருக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் பறித்து வரும் கும்பல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது.
ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேலைத்திட்டத்தினை சில மோசடிக்காரர்கள் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பிழையாக வழிநடத்தி வேலை பெற்றுத் தருவதாக பணம் பறிக்கும் ஏமாற்று வேலைகளை செய்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
இவ்வாறு செயற்படக் கூடியவர்கள் தாங்கள், பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஜனாதிபதியின் இணைப்பாளர்கள், கட்சி அமைப்பாளர்கள் எனும் தோரணையில் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறானவர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம் என அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றது. இதனை எமது அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளதோடு இவ்வாறானவர்களை அறியத் தருமாறும் கேட்டுக் கொள்கின்றது.
கடந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை எமது அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பயனடையவுள்ளனர்.
இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க இருக்கும் இளைஞர், யுவதிகள் இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment