மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரங்களை மறந்து ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டு ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுமே இன்று மோசடிக்காரர்களாகியுள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது மத்திய வங்கி பிணை முறி மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது.
ஆனால் தற்போதே அவர்களே அதிலிருந்து பின்வாங்குகின்றனர். இதன் மூலம் ஜனாதிபதியும் பிரதமரும் மோசடிக்காரர்களாகியுள்ளனர்.
தற்போது வங்கிகளில் பண மோசடிகள் இடம்பெறுவதில்லை. மாறாக மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மூலம் பணம் கொள்ளையிடப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அவற்றியிலேயே அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மஹிந்தவுக்கும் கோத்தாபயவுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் யாரும் கேள்வியெழுப்புவதில்லை.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அக்கிராசன உரையன்று பாராளுமன்ற சம்பிரதாயப்படி சபாநாயகரும் பிரதமரும் இணைந்தே அவரை வரவேற்றிருக்க வேண்டும். அதுவே வழமையாக பின்பற்றப்படும் முறைமையாகும். ஆனால் இந்த முறை அவ்வாறு பிரதமரால் ஜனாதிபதி வரவேற்கப்படவில்லை. இது குறித்து யாரும் கேள்வியெழுப்பவும் இல்லை என்றும் கூறினார்.
No comments:
Post a Comment