"ஓடக்கரை" பத்திரிகையை மீண்டும் மீன்பிடித்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக வெளியிட்டமைக்கு மகிழ்ச்சியடைவதாக, மீன்பிடி மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஸான்த தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்ற வைபத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
மீன்பிடி அமைச்சின் உத்தியோகபூர்வ பத்திரிகை மற்றும் இணையத்தள ஈ பேப்பர் ‘ஓடக்கரை’ வௌியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.
இப்பத்திரிகையை வெளியிட்டதால் நாட்டில் மீன்பிடித் துறை அமைச்சொன்று உள்ளது என்பது பறைசாற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மீன்பிடி அமைச்சு இன்னுமொரு அமைச்சின் உப அமைச்சாகவே செயற்பட்டது.
நாட்டை அபிவிருத்தி செய்த முக்கிய நான்கு அடிப்படை காரணிகளை நாம் காண முடியும். விவசாயம், மீன்பிடித் துறை, சுற்றுலாதுறை மற்றும் கைத்தொழில் துறை என்பவையே அவையாகும்.
இதில் மீன்பிடித் துறை விவசாய துறையுடன் இணைத்ததால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எமது நாட்டைச் சூழ கடலிருந்தாலும் மீனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதற்கு அனைவருமே பொறுப்புக் கூறவேண்டும்.
நாட்டின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு பாரிய பொறுப்புண்டு. எமது நாட்டுக்கு தேவையான மீனைப் பிடிப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என நாம் கவனம் செலுத்துகின்றோம். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகள் பெருமளவு மீன்கள் உள்ள பகுதியை சரியாக நவீன முறையில் அறிந்து கொண்டு பெரும் நன்மை அடைகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீன்பிடித் துறை அமைச்சராக இருந்த போது அமைக்கப்பட்ட சமுத்திரப் பல்கலைக்கழகம் தற்போது உயர் கல்வி அமைச்சுடன் இணைந்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழுள்ளது.
உலக தொழில்நுட்பத்துடன் எமது மீனவர்களை கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பயணத்திற்கு அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகளை சமூகத்துக்கு கொண்டு செல்ல லேக்ஹவுஸ் நிறுவனம் வழங்கும் பங்களிப்பை பாராட்ட வேண்டும்.
கடல் நீர், நன்னீர் மீன் பிடித் தொழில், உவர் நீர் மின்பிடி தொழில் மற்றும் அலங்கார மீன்கள் உற்பத்தி போன்று நீர்த்தாவரங்கள் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய இளைஞர்களின் சக்தியையும் நவீன தொழில் நுட்பத்தையும் இணைத்து செல்லும் பயணத்துக்கு லேக்ஹவுஸ் நிறுவனம் தனது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குமென நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



No comments:
Post a Comment