(ஆர்.விதுஷா)
நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் பெரும் தொகையான பணத்தை செலவிடுகின்றது. அதன் பிரதிபலனை அவர்கள் பெற்றுக் கொள்ள கூடிய வருடமாக இவ்வருடத்தை மாற்றியமமைக்க வேண்டும் என்று தெரிவித்த சுகாதார, சுதேச மருத்துவம் மற்றும் மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மலர்ந்திருக்கும் புதிய வருடத்தில் சுகாதார சேவைக்கான உத்தியோகத்தர்களை பலப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில வாரங்களே நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் பிரதிபலனை பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்து சுகாதார சேவை உத்தியோகத்தர்களும் பாடுபட்டு உழைக்க வேண்டியது அவசியமானதாகும்.
சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் தமது கடமைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான பலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய நாட்டு மக்கள் விரும்பும் வகையிலான சுகாதார சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
அந்த வகையில் தரமான மருந்துப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக் கொள்வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த அமைச்சின் குறிக்கோளாகும்.
கடந்த வருடத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் (190 பில்லியன்) வரையில் சுகாதார அமைச்சிற்கு சுகாதார சேவையின் பொருட்டு ஓதுக்கப்பட்டிருந்தது. இந்நிதி நாட்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே திரட்டப்பட்டிருந்தது. அவ்வாறாயின் அதன் பிரதிபலனை அவர்கள் பெற்றுக் கொண்டார்களா?
சிகிச்சை பெற வருபவர்கள் எதிர்காலத்தில் சிறந்த சேவையை பெற்றுக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். தமது பணத்தை செலவிட்டு நோய்க்கான சிகிச்சையை பெற வரும் மக்கள் அந்த சேவையில் திருப்தி அடைய வேண்டும்.
ஆகவே, அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வருடமான இந்த வருடத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியமானதாகும் என்றார்.
No comments:
Post a Comment