(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தைப் போன்று எமது அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்புக்களில் தலையிடாது. அவ்வாறு தலையிடுவதற்கான உரிமை எமக்கு கிடையாது. எனவே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் அதிகாரம் எமக்கு இல்லை என்று அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்று நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமை நீதித்துறையின் சுயாதீனமான தீர்மானமாகும். எமக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிடவோ அல்லது தீர்ப்பை எமக்கு சாதகமாக வழங்குமாறு கூறுவதற்கோ அதிகாரம் கிடையாது. எதிர்க்கட்சியாக இருந்த போது நாம் இந்நாட்டின் நீதித்துறையின் மீது மாத்திரமே நம்பிக்கை வைத்திருந்தோம்.
எனினும் கடந்த அரசாங்கம் அவர்களது ஆட்சி காலத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை நீக்குவதற்கு கூட நடவடிக்கை எடுத்தது. எனினும் நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடாது. எமக்கு அதற்கான அவசியமும் கிடையாது.
எனினும் ஊழல் மற்றும் மோசடிக்காரர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பில் நாம் வெளிப்படுத்தும் போது உரிய தரப்பு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment