(ஆர்.விதுஷா)
புதிய வருடத்தில் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்குமாக இரண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளதாவது,
நாட்டில் 70 வீதமானோர் தொற்றாத நோய்களின் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் சிலர் உயிரிழப்புக்களை சந்திக்கவும் நேரிட்டுள்ளது. நீரிழிவு நோய், புற்று நோய் உள்ளிட்ட நோய் நிலைமைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 4 தசாப்தங்களுக்கு முன்னர் வயது முதிர்ந்தவர்களை தாக்கிய இந்த நோய்கள் இப்போது 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்களின் மத்தியிலும் பரவியுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.
அது மட்டுமல்லாது 12 வயதிற்கும் குறைவானோருக்கும் நீரிழிவு நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த நோய் நிலைமைகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இந்த நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கு நாட்டிற்கே உரிய பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதனை உறுதிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனவே அதனை மையமாக கொண்டு நாம் இரண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளளோம். நாட்டிற்கு பொருத்தமான பாரம்பரிய உணவு வகைகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். அதற்கான நடவடிக்கைகளை பாடசாலையின் மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கம் மற்றும் ஏனைய சங்கங்களும் இணைந்து முன்னெடுத்தல் வேண்டும்.
அதேவேளை, நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகள் கிடைப்பதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியமை அவசியமானதாகும்.
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின்போது நாம் முன்வைத்த 20 ஆலோசனைகளையும் இதன்போது கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment