(இராஜதுரை ஹஷான்)
இடைநிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதிய கொடுப்பனவுகள் மீள வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவதுவெல, போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அரசாங்கம் இன்று பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் பெரும்பான்மை ஆதரவினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அரச ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. 2016 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வுதீய கொடுப்பனவுகள் இடைநிறுத்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரை பாதுகாப்பதாக குறிப்பிட்டவர்கள் இன்று இராணுவத்தினரது சம்பளம் பகுதியளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவற்றப்படவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததினால் அபிவிருத்தி மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை தொடர முடியவில்லை என அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
பெரும்பான்மை ஆதரவினை பெற்றுத்தான் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவை கிடையாது. கடந்த அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவு இல்லாமலே அரச நிர்வாகத்தை முன்னெடுத்து சென்றது.
போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அரசாங்கம் இன்று பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்ப்பட்ட விடயங்கள் அனைத்தும் பொய் என்பதை நாட்டு மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளார்கள்.
மக்களுக்கு நலன் பயக்கும் விதத்திலான திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் முழுமையான ஆதரவினை வழங்குவோம். ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த தவறான அரசியல் தீர்மானத்தை பொதுத் தேர்தலில் மக்கள் திருத்திக் கொள்வார்கள். ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்பட தயார் என்றார்.
No comments:
Post a Comment