நாட்டு மக்களின் வரிப்பணத்தை ஊதியமாக பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது சம்பிரதாய முறையிலிருந்து மாறி நாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவையை ஆற்றவேண்டுமென நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நேற்று தெரிவித்தார்.
சம்பிரதாயபூர்வமான திறைசேரிக்கு பதிலாக இளம் தலைவர்களுடன்கூடிய திறைசேரியொன்றை உருவாக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. திறைசேரியின் செயலாளர் என்ற வகையில் அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நான் வழங்க தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2020 வருடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (01) காலை நிதியமைச்சில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நேரத்தை வீணடிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் எதிராக முறைப்பாடு செய்வது, பேஸ்புக்கில் நேரத்தை வீணடிப்பது ஆகியவற்றை கைவிட வேண்டும்.
அந்நேரத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற கடிதமொன்றுக்கான பதிலை நீங்கள் எழுதுவீர்களேயானால் அதைவிட பெரிய அர்ப்பணிப்பொன்று இருக்க முடியாது.
கடிதங்களுக்கு பதில் எழுதப்படுவதில்லை, ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதில்லை போன்ற பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டன.
2019 இல் இடம்பெற்ற அனைத்துச் சம்பவங்களையும் மறந்து அனைத்து பணிகளையும் அரசாங்க உத்தியோகத்தர்கள் முறைப்படி முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான நோக்கு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். இளம் சந்ததியினருக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல தீர்மானங்களை நிறைவேற்றுங்கள். தவறுகள் இடம்பெறலாம். என்றாலும் நாம் தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கிச் செல்வோம் என்றார்.
No comments:
Post a Comment