அனுமதி பெற்று இதுவரை பல்கலைக்கு உள்வாங்கப்படாமல் காத்திருக்கும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

அனுமதி பெற்று இதுவரை பல்கலைக்கு உள்வாங்கப்படாமல் காத்திருக்கும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அனுமதி

கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதி பெற்றும் இதுவரை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்படாமல் காத்திருக்கும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் 2020 இல் கட்டாயம் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்தார்.

பல்கலைக்கழகங்களில் போதிய இடவசதியின்மை காரணத்தினால் இதுவரை எவ்வித பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் காத்திருக்கும் மேற்படி இரண்டு குழுக்களைச் சேர்ந்த மாணவர்களையும் இம்முறை ஒரே தடவையில் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை உயர் கல்வியமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

2020 இல் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள இம்மாணவர்களுக்காக காலையில் போன்றே மாலை விரிவுரைகளை நடத்துதல், பல்கலைக்கழகங்களுக்குள் கைவிடப்பட்டுள்ள வகுப்புக்கள், மண்டபங்கள் மற்றும் கேட்போர் கூடங்களை விரிவுரைக் கூடங்களாக மாற்றியமைத்தல் போன்ற ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

"கடந்த அரசாங்கமே வழமையாக உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் சற்று அதிகமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியை வழங்கியது. எனினும் பல்கலைக்கழகங்களில் போதிய இடவசதியின்மைக் காரணமாக இம்மாணவர்கள் இன்றுவரை பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றார்கள். 

இம்மாணவர்களை உண்மையில் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்றாக வேண்டும். எனினும் இந்நாட்டுப் பிரஜைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இரண்டு குழுக்களில் காத்திருக்கும் அனைத்து மாணவர்களையும் 2020 இல் ஒரே தடவையின் கீழ் உள்வாங்க நாம் தீர்மானித்துள்ளோம்," என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

"இதே நிலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது. எனினும் அதனை நாம் வெற்றிகரமாக முறியடித்தோம். அதேபோன்று இம்முறையும் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு குழுக்களினதும் மாணவர்களின் பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்போம்," என குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment