கொழும்பில் நேற்று பிற்பகல் திடீரென பெய்த கடும் மழை காரணமாக கொழும்பின் புறநகர் பகுதிகள் நீரில் முழ்கியதுடன், பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் முற்றுமுழுதாக கொழும்பு இருளிலும் முழ்கியது.
வீதிகள் நீரில் முழ்கியதால் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டதுடன், பல வாகனங்களும் நீரில் முழ்கின.
150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நாட்டின் முக்கிய பகுதிகளில் நேற்றும், இன்றும், நாளையும் பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்த பின்புலத்திலேயே நேற்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் கொழும்பில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடும் மழையால் பிற்பகல் 3.00 மணிக்கே கொழும்பு நகரம் இருளில் முழ்கியது. வெள்ளம் காரணமாக கொழும்பு, ஹோர்டன் பிரதேசம், கெம்பனி தெரு, யூனியன் பிளேஸ், விஜயராம வீதி, தும்புல்ல, நகரமண்டபம் வீதி, பேஸ்லைன் வீதி, ஆமர் வீதி, பொரள்ளை, மற்றும் பௌத்தாலோக மாவத்தை உட்பட பல பகுதிகள் நீரில் முழ்கியதுடன், குறித்த வீதிகளில் 2 அடிக்கும் அதிகமாக வெள்ள நீர் வழிந்தோடியது.
இதனால் கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கான போக்குவரத்து நேற்று மாலை மழை ஓயும்வரை முடங்கியதுடன், கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது. பல மணிநேரங்கள் வாகனங்கள் வெள்ள நீரில் சிக்குண்டிருந்தன. அத்துடன், போக்குவரத்து முடங்கியதால் அலுவலகப் பணியாளர்களும் பல மணிநேரங்கள் காத்திருந்த பின்னரே வீடுகளுக்குச் செல்ல நேரிட்டது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment