பதுளைப் பகுதியின் தெல்பத்தை பெருந்தோட்ட வெஸ்மோலேன்ட் பெருந்தோட்டப் பிரிவில் மண்சரிவு அபாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

பதுளைப் பகுதியின் தெல்பத்தை பெருந்தோட்ட வெஸ்மோலேன்ட் பெருந்தோட்டப் பிரிவில் மண்சரிவு அபாயம்

சீரற்ற காலநிலையினையடுத்து பெய்துகொண்டிருக்கும் பலத்த மழையினால் பதுளைப் பகுதியின் தெல்பத்தை பெருந்தோட்ட வெஸ்மோலேன்ட் பெருந்தோட்டப் பிரிவில் மண்சரிவு அபாயம் எதிர்நோக்கியதினால், 41 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர், திருவள்ளுவர் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்மோலேன்ட் பெருந்தோட்டத்தில் மூன்று தொழிலாளர் குடியிருப்புகள் மீது நேற்று (04) மண்மேடு சரிந்துள்ளது. இதையடுத்து, மண்சரிவு அபாயம் எதிர்நோக்கப்பட்டதினால், 41 தொழிலாளர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான நிவாரண உதவிகளையும், உலர் உணவுப் பொருட்களையும் வழங்க, பதுளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, பதுளை - பசறை பிரதான பாதையில் 10ஆம் மைல் கல்லருகே, பாரிய மண் சரிவு இடம்பெற்று, வாகனப் போக்குவரத்துக்களுக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து, பதுளை - பசறை பிரதான பாதை மூடப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை - பசறை பிரதான பாதையின் 6ஆம் மைல் கல்லருகே, தொடர்ந்து மண்மேடு சரிந்து வந்துகொண்டிருக்கின்றது.
இதேநிலையில், பதுளை செல்வகந்தை பெருந்தோட்ட நீண்ட வரிசைக் குடியிருப்புத் தொகுதி மீது மண்மேடு சரிந்துள்ள சம்பவம், நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து எட்டு தொழிலாளர் குடும்பங்களில் 32 பேர் பாடசாலை கட்டிடத் தொகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாயம் எதிர்நோக்கப்பட்டதும், குறிப்பிட்ட குடியிருப்புத் தொகுதியிலிருந்து, மக்கள் வெளியேற்றப்பட்டதினால், எவ்வித உயிர் ஆபத்துக்களும் இடம்பெறவில்லை.

மேலும் பதுளை ஓயா ஆறு பெருக்கெடுத்திருப்பமையினால், பதுளை தாழ் நிலப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் உடன் வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் குடியமருமாறு பதுளை அரச அதிபர் தமயந்தி பரணகமை மக்களைக் கேட்டுள்ளார். பதுளை ஓயா ஆறு பெருக்கெடுத்தமையினால், அருகாமையிலுள்ள கிராமத்தின் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பண்டாரவளைக்கும், தியத்தலாவைக்கும் இடையில் ரயில் பாதையில் நேற்று இரவு பாரியளவு மண்மேடு சரிந்துள்ளதினால் ரயில் சேவைகள் தியத்தலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

(பதுளை விசேட நிருபர் -எம்.செல்வராஜா)

No comments:

Post a Comment